Ananatham

பெரம்பலூர்

பெரம்பலூர் பெயர்காரணம்

மலைகள் சூழ்ந்த மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து மூன்றாக பிரிக்கப்பட்டு 1995 ஆம் ஆண்டு பெரம்பலூர் திருவள்ளுவர் மாவட்டமாகி 1997 ல் பெரம்பலூர் மாவட்டம் என்றாகியது. பின்பு 2007 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. பெரும்புலியூர் என்ற பெயர் மருவி பெரும்பலூர் என்றானதென்றும் பெரும்பலூர் என்ற பெயர் மருவி பெரம்பலூர் என்றானதாகவும் கூறப்படுகிறது.

பெரம்பலூர் சிறப்புகள்

தமிழகத்தின் மையமான பெரம்பலூர் மாவட்டம் நிலவியல் தொன்மை மிகுந்த பகுதி என்பதால் உலக அளவில் அதிகம் கவனம் பெரும் பகுதியாக உள்ளது. கிட்டத்தட்ட 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து நிலவியல் மாற்றங்களுக்கான எச்சங்கள் இப்பகுதியில் காணக்கிடைக்கின்றன.

ஜீராசிக் காலம், கற்காலம், சங்ககாலம், முடியாட்சிக்காலம், குடியாட்சிக்காலம் என கிட்டத்தட்ட அனைத்து காலநிலைகளிலும் இப்பகுதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவும் அந்தந்த கால வரலாற்று சுவடுகள் தாங்கிய அடையாளங்கள் நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது இம்மாவட்டத்தின் சிறப்பாகும்.

அம்மோனைட்டுகள், டைனோசர் முட்டைகள், கற்கால கருவிகள், முதுமக்கள் தாழிகள், சங்க கால தடயங்கள், கல்வெட்டுகள்,  பல்வேறு  மரபு சார்ந்த மன்னராட்சியில் கட்டப்பட்ட கோவில்கள் கல்வெட்டுகள், நடு கற்கள், கோட்டைகள், நாணயங்கள், முகலாய, ஆங்கிலேய , பிரெஞ்சு காலனி அடையாளங்கள், போர்கள், என ஆச்சர்யமூட்டும் வரலாற்று பின்னனியும்  வரலாற்று எச்சங்களையும் தாங்கி நிற்கிறது நம் பெரம்பலூா்.

இலக்கிய குறிப்புகள்

புறநானூறு அகநானூறு போன்ற சங்ககால இலக்கியங்களிலும் பெரம்பலூர் பகுதி பாடப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இலக்கியங்களை ஆராய்வதன் மூலம் பெரம்பலூர் வளமிக்க, செல்வ செழிப்பு மிக்க வணிக மையமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம். பெரம்பலூர் பகுதி அப்போது விச்சி நாடு, கண்டீரநாடு என்ற பெயர்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது.

பல்வேறு காலங்களில் பெரம்பலூர்

  • நிலவியல் தொன்மை

    உலகம் தோன்றிய காலத்தில் ஏழத்தாழ 300 கோடி காலத்திற்கு முன் ஏற்பட்ட நிலவியல் மாற்ற எச்சங்கள் இன்றும் பெரம்பலூர் பகுதியில் காணப்படுகின்றன, கோண்டுவானா பிரிவினையை உறுதிப்படுத்தும் நிலவியல் தடையங்கள் இங்கு உள்ளன.

  • ஜுராசிக் காலம்

    ஜுராசிக் காலம் எனப்படும் டைனோசர் எனப்படும் பிரம்மாண்ட மிருகங்கள் வாழ்ந்த காலத்தின் தடையங்களும் பெரம்பலூர் பகுதியில் அடிக்கடி கண்டெடுக்கப்படுகின்றன , ஜுராசிக் முட்டைகள், எலும்புகள், படிமங்கள் முதலானவை இங்கு பெருமளவில் கிடைக்கின்றன. மேலும் கடல் வாழ் உயிர்களின் படிமங்கள், அம்மோனைட்டுகள், நட்சத்திர மீன், கடற்பாசி, சுறா முதலானவற்றின் படிமங்களும் பெருமளவில் கிடைக்கின்றன.

  • கற்காலம்

    கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான மணல் குன்றுகள் காரை பகுதில் உள்ளன. இப்பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து கையகப்படுத்தி உள்ளது, இங்கு ஆய்வுகள் நடைபெறத்துவங்கும்போது அதன் தொன்மை புலப்படும். கீழடி போன்றே இங்கும் பழங்கால நாகரீக மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என கருதப்படுகிறது.

    புதிய கற்கால மனிதர்கள் வாழந்த மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் செங்குணம், நாரணமங்களம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன, ஆயினும் அவையெல்லாம் சென்னை சாலை விரிவாக்கப்பணிகளில் அழிந்துவிட்டன. காரைபகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. இப்பகுதியையும் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் தொன்மை குறித்தும் முறையான ஆய்வு செய்து கார்பன் டேட்டிங் செய்து வெளியிட தற்போது முயற்சிகள் நடக்கின்றன.

  • முடியாட்சிக்காலம்

    பெரம்பலூர் பகுதி  மனிதர்கள் நாகரீகமடைந்து முடியாட்சி கலாசாரத்திற்குள் அடியெடுத்த வைத்த போதும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளதை சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறியலாம். விச்சி நாடு, கண்டீரபுரம், மலைய நாடு என பல்வேறு பகுதிகளாக பெரம்பலூர் பகுதி வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் கண்டீரம் அதாவது இன்றைய வாலிகண்டா புரம் மிகப்பெரிய வணிக தளமாக செயல்பட்டு வந்துள்ளதையும் இலக்கியங்கள் மூலம் அறியலாம். சோழர், பாண்டியர், பல்லவர், முகலாயர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள் என பல்வேறு காலங்களிலும் பெரம்பலூர் தவிர்க்கப்பட முடியாத வரலாற்றுச்சிறப்பு மிக்க பகுதியாக திகழ்ந்துள்ளது என்பதை வாலிகண்ட புரம் வாலீஸ்வரர் கோவில் கல்வெட்டு, மதனகோபால ஸ்வாமி கோவில் கல்வெட்டு என பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.